Thursday, June 21, 2012

ஆறாம் அறிவு


தோழமைகளுக்கு வணக்கங்கள்..... மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம் ஆறாவது அறிவு, இவ்வுலகில் நம்மைத் தவிர்த்து வேறு எந்த ஜீவராசியும் சிந்தனை சக்தி படைத்தவை அல்ல.. அதனைத் தான் இப்போது மனிதன் ரோபோட்டுக்கு பொருத்தி விர்சுவல் ரியாலிட்டி என்ற பெயரில் இயந்திர மனிதனை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான் (டெல்லியில் நமது செந்தழல் ரவி சிந்திக்கும் ரோபோட்டை உருவாக்க முயற்சிப்பதாக தன் பயோவில் கூறியிருப்பது இதில் சேர்த்தி இல்லை)..

சிந்தனை சக்தி என நாம் பெருமை கொள்ளும் அனைத்து விஷயங்களும் நம்மை விட மற்றய ஜீவராசிகளுக்கு அதிகம் உள்ளதாகவே எனக்குப் படுகிறது.. பறவைகள் தம்மிடமுள்ள இறக்கை கொண்டு பறக்கத் தெரிந்ததெங்கனம்..? மிருகங்களுக்குப் பசித்தால் இரை தேடி வேட்டையாடி உண்ண சிந்தனை அவசியமில்லையா..? வாயில் உருவாகும் திரவம் கொண்டு வலை உண்டாக்கி இரை சிக்க வைக்க சிலந்திக்கு சிந்தனை வேண்டாவா..? பறவைகளுக்கு அருந்த நீர் கிடைக்காத போது பல்லாயிரம் மைல் பறந்து சென்றால் எங்கேனும் தண்ணீர் கிட்டும் எனும் சிந்தனை அதன் மூளையில் உருவானதெப்படி..? சுனாமியின் போது சிந்தனா சக்தி இல்லாத ஒரு மீனாவது தண்ணீரில் செத்ததா..அல்லது தரையில் ஒரு நாயாவது செத்ததா..? விவரித்துக் கூறிக் கொண்டே சென்றால் விடிந்து விடும் வானம்..ஏனைய விலங்கினங்களுக்கும் சிந்திக்கும் ஆற்றல் உண்டு என்பது என்னைப் பொறுத்த வரை சரியே.. பின் ஏன் மனிதன் மட்டும் உசத்தி..?? எதனால் உசத்தி...

குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவமனை செல்லும் மனிதனுக்குப் பல பெருமைகள் உண்டு.. மனிதன் மட்டுமே பழிவாங்கும் நோக்கம் கொண்டவன்.. நம்மைத் தவிர வேறெந்த உயிரினமும் முன்பகையை மனதில் கொண்டு பழி வாங்கப் புறப்படுவதில்லை..(நல்லபாம்பு தான் கொத்திய விஷம் ஏறி மரணம் அடைந்த மனிதனின் பிணம் சுடுகாட்டில் எரிவதை மரம் ஏறிப் பார்க்கும் என்ற எனது சிறு வயதுக் கதைகள் எந்த அளவு உண்மையோ..!!!)..பெரும்பாலும் தனது இருப்பை உணர்த்தவும் உணவுக்காகவும்,எதிர்பாலினப் புணர்ச்சிக்காகவும் மட்டுமே சண்டையிடும் மனோபாவம் கொண்டவை மற்றனைத்து உயிரினங்களும்.. பேசும் திறன் கொண்ட மனிதனால் மட்டுமே சக மனிதனை பூஜிக்கவும் விமர்சிக்கவும் இகழவும் முடிகிறது..நம்மைத் தவிர்த்து வேறெந்த ஜீவராசியும் சக உயிரினத்தை வேலை ஏவி அடிமைத்தனம் ஆக்கும் பணியினைச் செய்யும் நேர்த்தி கொண்டவை அல்ல..புவிச்சமநிலை பல்லுயிர்ப் பெருக்கத்தின் சங்கிலித் தொடரில் தப்பி பன்மடங்காகப் பெருகி வரும் உயிரினங்களில் மனிதனை மிஞ்ச வேறு ஜீவராசிகள் இப் பூவுலகில் இல்லை..( எதிர்காலத்தில் கொசு ஒருவேளை நம்மை விஞ்ச வாய்ப்புள்ளது) அறிவியலில் கொடி நாட்டி வரும் மனிதனுக்கு இயற்கை எதிரியாகி போனது எவ்வாறு என சிந்திக்க முயற்சிப்போம். ஜீவராசிகளின் ஜாம்பவானாக இருந்த டயனோசர் இப்புவியில் இன்று இல்லை என்ற சேதி மனித குலத்திற்கு பயமேற்படுத்தியதாகத் தெரியவில்லை.. கண்ணால் பொழுதுகளைக் கணக்கிட்டு மழை பெய்ய உள்ள வாய்ப்பினை அறியச் செய்த முன்னோர்களின் மிகச் சிறிய வகை திறமைகள் கூட இன்று நம்மிடையே இல்லை.. மரணம் வெல்ல விடை தேடி மருத்துவத்துறை ஆராய்ச்சிகளை செய்யும் நம்மிடம் மரத்துப்போன மனிதம் துளிர்க்க மருத்துவம் கண்டால் சந்ததிகளாவது நிம்மதியாக வாழும்.. சக மனிதனை நேசிப்போம்.. அதற்குமுன் நம் அண்டை உறவுகளை முதலில் நேசிக்கப் பழகுவோம்
உள்ளுணர்வுகளை கூர்தீட்டாது மழுங்கடிக்கச் செய்து விட்டோம்... இயற்கை அளித்த அருட்கொடைகளை அழித்துவிட்டு அறிவியல் கொண்டு மரணம் தேடுகிறோம்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~சிந்திப்போம் ஆறாம் அறிவினைக் கொண்டு~~~~~~~~~~~~~~~~~~~~~~

1 comment:

  1. நல்ல பதிவு.ஆறாம் அறிவிற்கு அர்த்தத்தை கொடுத்துவிட்டீர்கள்.

    ReplyDelete