*****************என்ன
எழுத ஆரம்பிப்பது என்ற சிந்தனையே ஒரு சிறிய பதிவிற்கு வித்திட்டது.. முகமூடி
அணிந்த எனைப் போன்ற பரகஸ்பதிகளைப் பற்றி இங்கே தோன்றியதை எழுதுகிறேன்********
நம்மில் பலரும்
பிறர் கவனிக்க ,வாழ்த்த, வணங்க, விமர்சிக்க
விரும்பும் விதமாகத் தான் வாழ எத்தனிக்கிறோம். எதைப் பற்றியும் கவலையில்லை
என கூறிக் கொள்ளும் எவரும் உடை களைந்து நடமாட விரும்புவதில்லை... இயந்திரத்தனமாக சிரிக்க வேண்டி இருக்கிறது என
சப்பைகட்டும் நம்மால் அதையே ஏன் வீட்டில் செய்ய முடிவதில்லை.....? ஒவ்வொரு
இடங்களிலும் பொய் முகம் காட்டி நல்லவன் என்ற பெயர் எடுக்கப் படாதபாடு படுகிறோம்.
யாரை திருப்திப் படுத்த இத்தனை நடிப்பினை கையாள்கிறோம்..? விடையில்லாக் கேள்விதான்
இது..!! உண்மை முகம் எனும் ஒன்று நம்மில் பலருக்கு மறந்தே விட்டது.. சுப
காரியங்களில் எதிரில் காணும் உறவுகளையும் நட்புகளையும் அதீத அக்கறையுடன் நலம்
விசாரித்து விடை பெறும் முன்னே மறந்துவிடுகிறோம்.
கூட்டுக்குடும்ப
முறைகளுக்கு விடை கொடுத்து விட்டோம்.. கருத்து மோதல் இல்லாத மனிதர்கள் என்பது
அபூர்வம், ஆயினும் வாடியுள்ள முகம் கண்டு “ஏனிந்த வாட்டம்” எனக் கேட்கும்
மனோதத்துவநிபுணத்துவம் வாய்ந்த முன்னோர்களைத் தனிமைப் படுத்தி விட்டோம்.. விவசாயம்
பொய்த்ததே ஒரு முக்கிய காரணியாக கொள்ளலாம்.. தனி மனித உழைப்பினால் பணம் ஈட்டும்
முறை நம்மில் பலரை மாற்ற ஆரம்பித்து விட்டது.. அலட்சியம் என்பது பலரும் வேண்டி
ஏற்றுக்கொண்ட வியாதியாகி விட்டது.
குழந்தைகளுக்காக
உழைப்பது என்பதே நம்மில் பலரின் லட்சியமாயிருக்கிறது நல்லதுதான்...எனக்குத்
தெரிந்து எந்தக் குழந்தையும் விலைப்பட்டியல் பார்த்து பொருள் கேட்டதில்லை..
எதிர்வீட்டு இஞ்சினீயரை பணத்தில்பழி தீர்க்க நம் வீட்டுக் குழந்தைக்கு காஸ்ட்லி கவுன் வாங்கிப் போட்டு அழகு பார்க்கிறோம்.நமக்குத்
தோன்றிய அரைவேக்காட்டுக் கவிதைகள் கூட நமது குழந்தைகளுக்கு தோன்றுமா எனத்
தெரியவில்லை..? தோன்றினாலும் அவர்கள் எம்மொழியில் அதனை விவரிப்பார்கள் எனத்
தெரியவில்லை..? கவிதையும் கற்பனையும் கனவுதானா அவர்களுக்கு..??
ஏதோ எழுத நினைத்தேன் வேறேதோ எழுதிக்
கொண்டிருக்கிறேன் எண்ணங்களை எண்ணியபடி
எழுத்தாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல
என்பதை அறிந்து கொண்டேன். முயற்சிப்போம்...
No comments:
Post a Comment