Thursday, June 21, 2012

ஆறாம் அறிவு


தோழமைகளுக்கு வணக்கங்கள்..... மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம் ஆறாவது அறிவு, இவ்வுலகில் நம்மைத் தவிர்த்து வேறு எந்த ஜீவராசியும் சிந்தனை சக்தி படைத்தவை அல்ல.. அதனைத் தான் இப்போது மனிதன் ரோபோட்டுக்கு பொருத்தி விர்சுவல் ரியாலிட்டி என்ற பெயரில் இயந்திர மனிதனை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான் (டெல்லியில் நமது செந்தழல் ரவி சிந்திக்கும் ரோபோட்டை உருவாக்க முயற்சிப்பதாக தன் பயோவில் கூறியிருப்பது இதில் சேர்த்தி இல்லை)..

சிந்தனை சக்தி என நாம் பெருமை கொள்ளும் அனைத்து விஷயங்களும் நம்மை விட மற்றய ஜீவராசிகளுக்கு அதிகம் உள்ளதாகவே எனக்குப் படுகிறது.. பறவைகள் தம்மிடமுள்ள இறக்கை கொண்டு பறக்கத் தெரிந்ததெங்கனம்..? மிருகங்களுக்குப் பசித்தால் இரை தேடி வேட்டையாடி உண்ண சிந்தனை அவசியமில்லையா..? வாயில் உருவாகும் திரவம் கொண்டு வலை உண்டாக்கி இரை சிக்க வைக்க சிலந்திக்கு சிந்தனை வேண்டாவா..? பறவைகளுக்கு அருந்த நீர் கிடைக்காத போது பல்லாயிரம் மைல் பறந்து சென்றால் எங்கேனும் தண்ணீர் கிட்டும் எனும் சிந்தனை அதன் மூளையில் உருவானதெப்படி..? சுனாமியின் போது சிந்தனா சக்தி இல்லாத ஒரு மீனாவது தண்ணீரில் செத்ததா..அல்லது தரையில் ஒரு நாயாவது செத்ததா..? விவரித்துக் கூறிக் கொண்டே சென்றால் விடிந்து விடும் வானம்..ஏனைய விலங்கினங்களுக்கும் சிந்திக்கும் ஆற்றல் உண்டு என்பது என்னைப் பொறுத்த வரை சரியே.. பின் ஏன் மனிதன் மட்டும் உசத்தி..?? எதனால் உசத்தி...

குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவமனை செல்லும் மனிதனுக்குப் பல பெருமைகள் உண்டு.. மனிதன் மட்டுமே பழிவாங்கும் நோக்கம் கொண்டவன்.. நம்மைத் தவிர வேறெந்த உயிரினமும் முன்பகையை மனதில் கொண்டு பழி வாங்கப் புறப்படுவதில்லை..(நல்லபாம்பு தான் கொத்திய விஷம் ஏறி மரணம் அடைந்த மனிதனின் பிணம் சுடுகாட்டில் எரிவதை மரம் ஏறிப் பார்க்கும் என்ற எனது சிறு வயதுக் கதைகள் எந்த அளவு உண்மையோ..!!!)..பெரும்பாலும் தனது இருப்பை உணர்த்தவும் உணவுக்காகவும்,எதிர்பாலினப் புணர்ச்சிக்காகவும் மட்டுமே சண்டையிடும் மனோபாவம் கொண்டவை மற்றனைத்து உயிரினங்களும்.. பேசும் திறன் கொண்ட மனிதனால் மட்டுமே சக மனிதனை பூஜிக்கவும் விமர்சிக்கவும் இகழவும் முடிகிறது..நம்மைத் தவிர்த்து வேறெந்த ஜீவராசியும் சக உயிரினத்தை வேலை ஏவி அடிமைத்தனம் ஆக்கும் பணியினைச் செய்யும் நேர்த்தி கொண்டவை அல்ல..புவிச்சமநிலை பல்லுயிர்ப் பெருக்கத்தின் சங்கிலித் தொடரில் தப்பி பன்மடங்காகப் பெருகி வரும் உயிரினங்களில் மனிதனை மிஞ்ச வேறு ஜீவராசிகள் இப் பூவுலகில் இல்லை..( எதிர்காலத்தில் கொசு ஒருவேளை நம்மை விஞ்ச வாய்ப்புள்ளது) அறிவியலில் கொடி நாட்டி வரும் மனிதனுக்கு இயற்கை எதிரியாகி போனது எவ்வாறு என சிந்திக்க முயற்சிப்போம். ஜீவராசிகளின் ஜாம்பவானாக இருந்த டயனோசர் இப்புவியில் இன்று இல்லை என்ற சேதி மனித குலத்திற்கு பயமேற்படுத்தியதாகத் தெரியவில்லை.. கண்ணால் பொழுதுகளைக் கணக்கிட்டு மழை பெய்ய உள்ள வாய்ப்பினை அறியச் செய்த முன்னோர்களின் மிகச் சிறிய வகை திறமைகள் கூட இன்று நம்மிடையே இல்லை.. மரணம் வெல்ல விடை தேடி மருத்துவத்துறை ஆராய்ச்சிகளை செய்யும் நம்மிடம் மரத்துப்போன மனிதம் துளிர்க்க மருத்துவம் கண்டால் சந்ததிகளாவது நிம்மதியாக வாழும்.. சக மனிதனை நேசிப்போம்.. அதற்குமுன் நம் அண்டை உறவுகளை முதலில் நேசிக்கப் பழகுவோம்
உள்ளுணர்வுகளை கூர்தீட்டாது மழுங்கடிக்கச் செய்து விட்டோம்... இயற்கை அளித்த அருட்கொடைகளை அழித்துவிட்டு அறிவியல் கொண்டு மரணம் தேடுகிறோம்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~சிந்திப்போம் ஆறாம் அறிவினைக் கொண்டு~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, June 10, 2012

தான் தோன்றி...


*****************என்ன எழுத ஆரம்பிப்பது என்ற சிந்தனையே ஒரு சிறிய பதிவிற்கு வித்திட்டது.. முகமூடி அணிந்த எனைப் போன்ற பரகஸ்பதிகளைப் பற்றி இங்கே தோன்றியதை எழுதுகிறேன்********
நம்மில் பலரும் பிறர் கவனிக்க ,வாழ்த்த, வணங்க, விமர்சிக்க  விரும்பும் விதமாகத் தான் வாழ எத்தனிக்கிறோம். எதைப் பற்றியும் கவலையில்லை என கூறிக் கொள்ளும் எவரும் உடை களைந்து நடமாட விரும்புவதில்லை...  இயந்திரத்தனமாக சிரிக்க வேண்டி இருக்கிறது என சப்பைகட்டும் நம்மால் அதையே ஏன் வீட்டில் செய்ய முடிவதில்லை.....? ஒவ்வொரு இடங்களிலும் பொய் முகம் காட்டி நல்லவன் என்ற பெயர் எடுக்கப் படாதபாடு படுகிறோம். யாரை திருப்திப் படுத்த இத்தனை நடிப்பினை கையாள்கிறோம்..? விடையில்லாக் கேள்விதான் இது..!! உண்மை முகம் எனும் ஒன்று நம்மில் பலருக்கு மறந்தே விட்டது.. சுப காரியங்களில் எதிரில் காணும் உறவுகளையும் நட்புகளையும் அதீத அக்கறையுடன் நலம் விசாரித்து விடை பெறும் முன்னே மறந்துவிடுகிறோம்.
கூட்டுக்குடும்ப முறைகளுக்கு விடை கொடுத்து விட்டோம்.. கருத்து மோதல் இல்லாத மனிதர்கள் என்பது அபூர்வம், ஆயினும் வாடியுள்ள முகம் கண்டு “ஏனிந்த வாட்டம் எனக் கேட்கும் மனோதத்துவநிபுணத்துவம் வாய்ந்த முன்னோர்களைத் தனிமைப் படுத்தி விட்டோம்.. விவசாயம் பொய்த்ததே ஒரு முக்கிய காரணியாக கொள்ளலாம்.. தனி மனித உழைப்பினால் பணம் ஈட்டும் முறை நம்மில் பலரை மாற்ற ஆரம்பித்து விட்டது.. அலட்சியம் என்பது பலரும் வேண்டி ஏற்றுக்கொண்ட வியாதியாகி விட்டது.  
குழந்தைகளுக்காக உழைப்பது என்பதே நம்மில் பலரின் லட்சியமாயிருக்கிறது நல்லதுதான்...எனக்குத் தெரிந்து எந்தக் குழந்தையும் விலைப்பட்டியல் பார்த்து பொருள் கேட்டதில்லை.. எதிர்வீட்டு இஞ்சினீயரை பணத்தில்பழி தீர்க்க நம் வீட்டுக் குழந்தைக்கு  காஸ்ட்லி கவுன் வாங்கிப் போட்டு அழகு பார்க்கிறோம்.நமக்குத் தோன்றிய அரைவேக்காட்டுக் கவிதைகள் கூட நமது குழந்தைகளுக்கு தோன்றுமா எனத் தெரியவில்லை..? தோன்றினாலும் அவர்கள் எம்மொழியில் அதனை விவரிப்பார்கள் எனத் தெரியவில்லை..? கவிதையும் கற்பனையும் கனவுதானா அவர்களுக்கு..?? 

ஏதோ எழுத நினைத்தேன் வேறேதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்  எண்ணங்களை எண்ணியபடி எழுத்தாக மாற்றுவது  அத்தனை சுலபமல்ல என்பதை அறிந்து கொண்டேன். முயற்சிப்போம்...