மக்கள் மருத்துவர்!
‘கெடும் இடராய எல்லாம் கேசவா என நாளும்...’_ என்று திருவாய்மொழியில் ஒரு அற்புதமான வரியை ஆழ்வார்களின் தலைவராக போற்றப்படுகின்ற ஞானத் தந்தை நம்மாழ்வார் சொல்லி இருக்கிறார். அதாவது துன்பம் சூழ்ந்த நேரத்தில் கேசவா என்று சொன்னால் அந்த துன்பம் போகும் என்பது இதன் கருத்து.
அரை நூற்றாண்டுகால கோவில்பட்டிக்கும் அதனைச் சுற்றி உள்ள கிராமத்து மக்களுக்கும் சென்னகேசவன் என்ற சொல் அப்படித்தான் இருந்தது. அவர் பெயரை நினைக்கும் போது முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய் யோசித்தால் முதலில் அந்த ‘மிக்சர்’ நாவில் இனிக்கிறது. அந்த மணத்தை மூக்கு தேடுகிறது. அந்தக் காலத்தில் காய்ச்சல் இருக்கிறதோ இல்லையோ மருத்துவமனைக்கு நுழையும் சின்னஞ்சிறுசுகள் அனைவரும் அந்த மிக்சர் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு இருந்திருப்போம். அதில் ஏதோ ஒரு மந்திரத்தன்மை இருந்தது. அது மருத்துவர் சென்னகேசவனின் நல்ல மனம், குணமாகக் கூட இருக்கலாம்!
ஒரு நாள் மதிய வேளையில் மருத்துவர் சென்னகேசவன் அவர்களின் இளைய மகனும் என்னுடைய பால்ய காலப் பள்ளித் தோழனுமான சீனிவாசன், ‘அப்பாவின் மருத்துவமனை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்காக ஒரு மலர் வெளியிடுகிறோம்’ என்று சொன்னபோது, ‘இன்று காலையில் தான் உன் அப்பா பற்றி நானும் என் அக்காவும் பேசிக் கொண்டு இருந்தோம். டாக்டரைப் பற்றி என் மகள்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தோம்’ என்று நான் சொன்னேன். அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் எங்கள் குடும்பத்தில் மறக்கமுடியாத மாமனிதராக வாழ்ந்தவர் அவர்.
ஒரு நாள் என்னுடைய தாத்தா ப.ரா.முத்தையா அவர்கள் கடுமையான காய்ச்சல் காரணமாக கிராமத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்துவிட்டார்கள். எங்கள் சொந்த ஊரான வாழவந்தாள்புரத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில்தான் ராஜபாளையம் இருக்கிறது. அங்கு போய் உடனடியாக சிகிச்சை பெற்றிருக்கலாம். ‘அங்கயே பக்கத்துல காட்டியிருக்கலாமே?’ என்று என்னுடைய தந்தையார் புலவர் படிக்கராமு அவர்கள் சொன்னார்கள்.
‘‘நம்ம சென்னகேசவனைப் பார்த்தாலே எனக்குச் சரியா போயிடும். அதுனால தான் வந்துட்டேன்’’ என்று என்னுடைய தாத்தா சொன்னார்கள். இதுதான் இந்த வட்டாரத்து மக்களின் பொதுக் கருத்தாக இருந்தது. என்ன செய்யுது என்று கேட்டு சும்மா ஸ்டெத்தாஸ்கோப் வைத்தால் போதும், ‘உடம்பு சரியாகிவிட்டது’ என்ற உற்சாகத்துடன் மருத்துவமனையைவிட்டு வெளியே வருபவர்களை நான் பார்த்திருக்கிறேன். நான் பார்த்த காலத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் தான் வாங்குவார்கள். அதையும் கேட்க மாட்டார்கள். கொடுக்காமல் போனவர்களை மறித்தது இல்லை. அவர்களே மறுதடவை வரும்போது மதிக்காமல் இருந்ததும் இல்லை. அதனால் தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் நினைக்கக்கூடியவராக மருத்துவர் சென்னகேசவன் அவர்கள் இருக்கிறார்கள்.
மருத்துவத்தை ஏதோ தன்னுடைய தொழிலாக, வருமானம் பார்க்கும் வழியாகக் கருதாமல் சேவை மனத்துடன் செய்தவர் அவர். அதற்காக இந்தப் பொதுமக்களுக்கு சேவை செய்கிறோம் என்று அவர் நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டதும் இல்லை. அதனைத் தன்னுடைய கடமையாக அவர் நினைத்தார்.1980 காலகட்டத்தில் சிறுவர்களுக்கு அதிகமான அளவில் புண், கொப்புளங்கள் பரவியது. அதனைச் சுத்தம் செய்து சிகிச்சை செய்வதற்கே ஒரு சகிப்புத்தனம் வேண்டும்.இன்றைக்கு ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பு மருத்துவர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் சிறப்பு மருத்துவர் என்று சொல்லிக் கொள்ளாமலேயே அனைத்துக்கும் சிறப்பான மருத்துவராக இருந்தவர். பெரிய மருத்துவமனைகளில் வேலை பார்த்தவர் இல்லை. உலகக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவரும் இல்லை. புகழ்வாய்ந்த பட்டங்கள் பெற்றவர் இல்லை. ஆனால் பயன்பெற்ற மக்கள் அனைவரும் ‘நம்ம டாக்டர்’, ‘எங்க டாக்டர்’ என்று சொல்ல வைத்தவர் சென்னகேசவன். ஒரு சிறு நகரில் இருந்ததால் அவர் பெயர் வெளி உலகத்துக்குத் தெரியவில்லை. சென்னையில் இருந்திருந்தால் பொதுமருத்துவமனை வாசலில் வைக்கப்பட்ட டாக்டர் ரங்காச்சாரி சிலைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டு இருப்பார். அத்தகைய தகுதியும் திறமையும் வாய்ந்த சென்னகேசவன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
.......................
ப.திருமாவேலன்
நிர்வாக ஆசிரியர்
ஆனந்தவிகடன்
சென்னை